1997 ஆம் ஆண்டு கோவையில் காவல்துறையும் சங்பரிவாரும் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் தகர்க்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அன்றைய கருணாநிதி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.
சங்பரிவாரின் மத துவேஷத்தால் தூண்டப்பட்டு கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி முஸ்லிம்களைச் சிறையில் அடைத்தது கருணாநிதியின் அரசு. அவர்களில் பலரும் சந்தேகம் காரணமாக அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகின்றவர்கள். கோவை கலவரத்தில் கருணாநிதி காட்டிய மெத்தனமும் முஸ்லிம்களைக் கைது செய்வதில் அவர்கள் மீது பழி போடுவதில் காட்டிய வேகமும் அன்றே அவரது முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது.
முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடிய இயக்கங்கள் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடின. வழக்ககம் போல் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கருணாநிதி. முஸ்லிம்களெல்லாம் அவர் கட்சிக்காகத் தேர்தலில் பணியாற்றி ஓட்டுகளையும் சேகரித்துக் கொடுத்தனர். கருணாநிதி வெற்றியும் பெற்றார். ஆட்சிக்கு வந்த கருணாநிதி வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு விழா கொண்டாடிய புலவர்களும் கருணாநிதி புகழ் பாடி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நினைவூட்டினர். முஸ்லிம்களுக்கு ஏதோ இட ஒதுக்கீடு என்று அறிவித்தார் கருணாநிதி. அது நடை முறைக்கு வந்ததோ இல்லையோ, நம்மவர்கள் அதைக் கொண்டாடினோம். வெற்றி பெற்றோம் லட்சியத்தை அடைந்தோம் என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்தோம்.
இந்நேரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகள் விடுதலை என்று நற்செய்தி அறிவித்தார் கருணாநிதி. ஆனால், விடுதலை செய்யப்பட்ட 1,405 கைதிகளில் மதக் கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற செய்தியின் மூலம், எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களுக்கு வேதனை அளித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புவாத வழக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் சிறையில் வாடும் முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த முஸ்லிம் குடும்பங்களை ஏமாற்றும் விதத்தில் கருணாநிதி அரசு செயல்பட்டுள்ளது. வெளிப்படையாக முஸ்லிம்களின் நண்பன் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் கருணாநிதியின் கபட முகம் இதிலிருந்து வெளிப்படுகிறது.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் சங்பரிவாரங்கள் வெறியாட்டம் போடுகிறது. முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கும் மத அடிப்படையிலான ஒரு விழாவாக இன்று விநாயக சதுர்த்தி பரிணமித்துள்ளது. பள்ளி வாசல்கள் வழியாகத்தான் ஊர்வலம் போவோம், முஸ்லிம்களை இழிவுப் படுத்தி கோஷமிடுவோம் என்று இந்துத்துவா அடம்பிடிக்கின்றது. அதை நியாயப் படுத்தி உரிமைக் குரல்(?) எழுப்ப ராமகோபாலன் , இல கணேசன் வகையறாக்களும் அறிக்கையிடுகின்றன. கலவரக் காரர்களை அடக்க வக்கற்ற காவல்துறை முஸ்லிம்கள் மீது வெறியாட்டம் போடுகிறது. பள்ளிவாசல் கதவுகளை உடைக்கிறது. பூட்ஸ் காலுடன் பள்ளிவாசலுக்குள் சென்று நோன்பாளிகள் என்ற இரக்கம் கூட இல்லாமல் மிருகத்தனமாக முஸ்லிம்களைத் தாக்குகிறது. இது என்ன மக்களாட்சியா? அராஜக ஆட்சியா?
பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செல்ல அரசாணை தடையாம். காவல் துறை அத்தடையை மீறி அனுமதி அளித்ததாம்!! ஒரு சமுதாய இணைய தளத்தில் இதைப் படித்ததும் அதிர்ச்சியாகி விட்டது. தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி செய்கிறாரா அல்லது கருணாநிதியை காவல் துறை ஆட்சி செய்கிறதா? அரசு கட்டளையை காவல் துறை மீறும் அளவுக்கு கையாலாகாத நிலையில்தான் தமிழக அரசு உள்ளதா? இந்த ஆட்சியின் நம்பகத் தன்மை இவ்வளவு தானா?
தினமலர் என்ற பத்திரிகை. இந்நாட்டின் மதச் சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் விதமாக நபிகளாரைக் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை ஏதோ தமிழ் நாட்டின் அரசியல் வாதிகளைப் போன்று நினைத்து விட்டனர் போலும். நபிகள் நாயகத்தின் மீதுள்ள நேசம் ஒரு முஸ்லிமுக்கு அவனது கொள்கை சார்ந்த விஷயம் ஆகும். அவனது தாய் தந்தையரைத் திட்டினாலும் பொறுத்துக் கொள்வானே தவிர நபிகள் நாயகத்தைத் திட்டுவதை ஒரு முஸ்லிம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நபிகள் நாயகத்தை நேசிப்பது என்பது அவனது இரத்தத்தோடு ஊறியது ஆகும். மத உணர்வுகளைச் சீண்டியவர்களைக் கைது செய்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவித்த முஸ்லிம்கள் மீது மிருகத் தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சென்னையில் ஒரு வியாபார நிறுவனம் தீப் பிடித்ததற்காக மறுதினமே களம் குதித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி ஒரு முஸ்லிம் சமுதாயத்தின் மதவுணர்வுகளைச் சீண்டி தமிழகத்தின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைத்த தினமலரின் செயல் குறித்து வாய் திறக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவல் துறையின் அராஜகம், அது குறித்த கருணாநிதியின் மவுனம் காவல் துறைக்கும் சங் பரிவாரத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
தம் வீட்டு ஆண்களை விடுதலை செய்யக் கோரி நமது சமுதாயப் பெண்மணிகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளமை வருந்தத் தக்கது. எங்கே சமுதாய இயக்கங்கள்? இவர்களுக்காக பாரபட்சமின்றி அவர்கள் களமிறங்கட்டும். அவை தத்தமது இயக்கங்களுக்கு விளம்பரம் தேடித் தரும் பேரணிகள் என்பதைவிட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக் குரல்களாக ஒலித்து அவர்களுக்கு நீதி வாங்கித் தரட்டும். இது அந்தந்த குடும்பத்துக்காக உள்ள பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை.
“தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே அன்பு செலுத்துவதிலும் தங்களிடையே இரக்கம் கொள்வதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடல் போல் நீர் காண்பீர். அதன் ஒரு உறுப்புக்கு சுகவீனம் ஏற்பட்டால் அதற்காக அவ்வுடலின் மற்ற உறுப்புக்கள் விழித்துக் கொண்டும், காய்ச்சல் ஏற்பட்டும் நோய்வாய்ப் படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் (ரழி) நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
0 comments:
Post a Comment